“இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நாளை நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியது: ''இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம். இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் பங்கு என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். மற்ற கட்சி பற்றி நான் எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில், இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியோடும் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நான் தயாராக இருக்கிறேன்.

நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து கேட்கிறீர்கள். அவர்களால் நாடாளுமன்றத்தையே பாதுகாக்க முடியவில்லை என்றால், எவ்வாறு நாட்டை பாதுகாப்பார்கள். இது மிக ஆழமான கேள்வி. இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தமாக இடைநீக்கம் செய்ய முடியாது. ஆனால், நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது என அவர்கள் கருதுகிறார்கள். ஏன் அவர்கள் அஞ்சுகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டால் அவர்கள் எவ்வாறு கேள்விகளை எழுப்புவார்கள்.

மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமானவை. கிரிமினல் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. புதிய ஆட்சி வர உள்ளது. இந்தச் சூழலில் ஏன் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்? எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தை நடத்த அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. இது ஜனநாயக கேலிக்கூத்து'' என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE