கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் என்ஐஏ சோதனை - ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையதாக 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகா உள்பட 4 மாநிலங்களின் 19 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிராவில் 40 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய முக்கியத் தலைவர் என்பதும், அமைப்பில் புதிதாக சேர்பவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து வைக்கக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் பெங்களூருவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்ட்டில் ஜாம்ஷெட்பூர், பொகாரோ ஆகிய 2 இடங்களிலும், மகாராஷ்டிராவில் அமராவதி, மும்பை, புனே ஆகிய 3 இடங்களிலும், டெல்லியில் ஓர் இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெல்லாரியைச் சேர்ந்த மினாஜ் என்கிற முகம்மது சுலைமான், சையத் சமீர், பெங்களூருவைச் சேர்ந்த மொகம்மது முனிருத்தின், சையத் சமினுல்லா, முகம்மது முசாம்மில், மும்பையைச் சேர்ந்த அனாஸ் இக்பால் ஷேக், டெல்லியைச் சேர்ந்த ஷாயான் ரஹ்மான் எனும் ஹூசைன், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஷபாஸ் என்கிற ஜூல்பிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனையில், கணக்கில் வராத மிகப் பெரிய தொகை, ஆயுதங்கள், கூர்மையான கருவிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டு சக்திகளின் உத்தரவுகளின்படி, இந்தியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE