“அடிமை மனப்பான்மையில் இருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது” - உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

லக்னோ: இந்தியாவின் கட்டிடக் கலை, அறிவியல், யோகா ஆகியவை ஆன்மிகக் கட்டுமானங்களைச் சுற்றிக் கற்பனை செய்ய முடியாத உயரங்களை அடைந்துள்ளன என்றும், அடிமை மனப்பான்மையில் இருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உலகின் மிகப் பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மகாமந்திரை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தை பார்வையிட்டார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியது: “இன்று எனது காசி பயணத்தின் இரண்டாவது நாள். காசியில் செலவிடும் ஒவ்வொரு கணமும் முன்னெப்போதும் இல்லாத அனுபவங்களால் நிரம்பியுள்ளது.

அடிமைத்துவ காலகட்டத்தில், இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அடக்குமுறையாளர்கள் முதலில் நமது சின்னங்களை குறிவைத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு, கலாச்சார சின்னங்களை மீண்டும் உருவாக்குவது அவசியமானது. ஒரு நாடு அதன் சமூக யதார்த்தங்களையும், கலாச்சார அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும்போது முழுமையான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோம்நாத் கோயிலை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்புகள் இருந்தன. பல சதாப்தங்களாக இந்த சிந்தனை, ஆதிக்கம் செலுத்தியது. இதன் விளைவாக நாடு தாழ்வு மனப்பான்மையின் குழிக்குள் தள்ளப்பட்டது. மேலும் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ள மறந்துவிட்டது.

நாடு சுதந்திரம் அடைத்து ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், காலத்தின் சக்கரங்கள் இன்று மீண்டும் திரும்பியுள்ளன. அடிமை மனப்பான்மையிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. பல நூற்றாண்டுகளாக, பொருளாதார வளம் மற்றும் உடல் சார்ந்த வளர்ச்சிக்கு இந்தியா எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரசு, சமூகம், துறவிகள் சமாஜ் அனைத்தும் காசியின் புத்துயிரூட்டலுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஸ்வர்வேத் மகாமந்திர் இந்தியாவின் சமூக மற்றும் ஆன்மிக வலிமையின் நவீன அடையாளமாகும்.

இந்தியாவின் கட்டிடக்கலை, அறிவியல், யோகா ஆகியவை ஆன்மீகக் கட்டுமானங்களைச் சுற்றிக் கற்பனை செய்ய முடியாத உயரங்களை அடைந்துள்ளன” என்று பேசினார். ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கால பைரவர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE