நாடாளுமன்ற அமளி எதிரொலி: இதுவரை 90+ எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று: நாடாளுமன்றம் இன்று காலை கூடியது முதல் கடந்த 13-ம் தேதி மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக 2 கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். காலையில் அவையை நடத்திய சபாநாயகர் ஓம் பிர்லா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தார்.

“13-ஆம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான யோசனைகள் கேட்கப்பட்டன. பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அளிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியவாரும் பதாகைகளை ஏந்தியவாறும் சபாநாயகரை நோக்கி வந்தனர். பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட வேண்டாம் என கைகூப்பி கேட்டுக்கொள்வதாக ஓம் பிர்லா தெரிவித்தார். மேலும், மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறும், தனிப்பட்ட அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் அமளியில் ஈடபட்டனர். இதையடுத்து, அவை மதியம் 2 மணி வரை ஒத்தவைக்கப்பட்டது.

மக்களவை 2 மணிக்கு கூடியதும் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை மதியம் 2.45 வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை 2.45-க்கு கூடியதும் தபால் அலுவலக மசோதா 2023 அவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுகான், தபால் நிலையங்களை அரசின் பல்வேறு சேவைகளுக்கான மையமாக மாற்றுவதற்கான முயற்சியே இந்த மசோதா என குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு நடுவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை 3 மணிக்குக் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். பலரும் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் 33 பேரை கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, கவுரவ் கோகாய்ய உள்பட 33 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை உறுப்பினர்கள் 13 பேர் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று: இதேபோல், மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியானது அல்ல எனக் கூறிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவை சமூகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவைத் தலைவரின் கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து முதலில் அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை 2 மணிக்குக் கூடியதும் ஜம்மு காஷ்மீர் மறுவரையரை இரண்டாவது திருத்த மசோதாவை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. எனினும், அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரமோத் திவாரி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மனோஜ் ஜா உள்பட 45 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே, ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 46 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்