நாக்பூர் ராணுவ தளவாட ஆலையில் பயங்கர வெடி விபத்து: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே ராணுவ தளவாட ஆலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கொன்தலிக்கு அருகே பஜர்கான் கிராமத்தில் சோலார் நிறுவனத்தின் ஆலை உள்ளது. ராணுவத்துக்கு தேவையான ட்ரோன்கள், வெடிபொருட்கள், தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலையின் வார்ப்பு பிரிவில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது ஆலைக்குள் 12 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 9 பேர்உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். வார்ப்பிரும்பு ஆலையில் பேக்கிங் செய்யும்போது விபத்து நடந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சோலார் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த சோகமான சூழலில், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE