நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தீவிரமான பிரச்சினை; தீர்வு காண அனைவரும் முன்வரவேண்டும் - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தீவிரமான பிரச்சினை என்றும் இதை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவைக்குள் குதித்து, வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுபோல நாடாளுமன்ற வளாகத்திலும் 2 பேர் கோஷங்களை எழுப்பியவாறு வண்ண புகை குப்பிகளை வீசினர். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும்இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் வெளியாகும் தினசரிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற அத்துமீறல் தீவிரமான பிரச்சினை. இது மனவேதனையும் கவலையும் அளிப்பதாக உள்ளது. இதை குறைத்து மதிப்பிடவோ புறந்தள்ளவோ முடியாது. இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.இந்த விவகாரத்தை மக்களவைத் தலைவரும் தீவிரமாக எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேநேரம் விசாரணை அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்துக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் இயக்குநர் தலைமையிலான இக்குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து உறுப்பினர்களுக்கும் நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதினார். அதில், “மக்களவையில் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இதையடுத்து நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE