நாடாளுமன்ற அத்துமீறல் | ராஜஸ்தானில் எரிந்த நிலையில் செல்போன் பாகங்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரின் செல்போன்களின் உடைந்த பாகங்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்ற இளைஞர் தன் வசம் இருந்த ஐந்து போன்களையும் எரித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லலித் ஜா விசாரணைக் குழுவை குழப்பும் வகையில் பல்வேறு தகவல்களையும் கூறிவந்த நிலையில் எரிந்த நிலையில் ஐந்து போன்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக, லலித் ஜா டெல்லியில் இருந்து தப்பித்துச் செல்வதற்கு, பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்து மகேஷ் குமாவத் என்பவர் உதவி செய்துள்ளார். போலீஸாரிடம் லலித் ஜா கடந்த 14-ம் தேதி இரவு சரணடைய வந்தபோது, மகேஷ் குமாவத்தும் உடன் வந்து சரணடைந்தார். இதையடுத்து இருவரும் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர். லலித் ஜா டெல்லியிலிருந்து தப்பிச் செல்ல, உதவி செய்ததையும், மற்ற குற்றவாளிகளின் செல்போன்களை உடைத்து அழித்ததையும் மகேஷ் குமாவத் ஒப்புக் கொண்டார். போன்களை எரிக்கும் யோசனையையும் மகேஷ் குமாவத் தான் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் விசாரணைக் குழுவானது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் லலித் ஜா உள்பட ஐவர் பயன்படுத்திய செல்போன் எண்கள் மூலம் அவர்களைப் பற்றி மேலும் தகவல் அளிக்குமாறு கோரியுள்ளது.

நடந்தது என்ன? மக்களவையில் கடந்த 13-ம் தேதி வண்ண புகை குப்பிகளை வீசி சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் தேவி, லலித் ஜா ஆகியோரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் லலித் ஜா உருவாக்கிய பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்க விரும்பும் எதிர்ப்பை, மிகுந்த தாக்கத்துடன் எவ்வாறு தெரிவிக்கலாம் என பல திட்டங்களை ஆலோசித்துள்ளனர். இறுதியாக மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ண புகை குப்பிகளுடன் குதிக்கும் திட்டத்தை தேர்வு செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்கில் அடுத்த முக்கிய நிகழ்வாக எரிக்கப்பட்ட செல்போன் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE