நாடாளுமன்ற அத்துமீறலில் தொடர்புடைய 6-வது நபர் மகேஷ் குமாவத் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது நபராக மகேஷ் குமாவத் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்து புகையை கக்கும் குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோரும் அன்றைய தினமே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டதாகவும் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படும் லலித் மோகன் ஜா கடந்த வியாழக்கிழமை கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மகேஷ் குமாவத் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் லலிதா ஜா, டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பியோடி மகேஷ் குமாவத்துக்குச் சொந்தமான இடத்தில் மறைந்து இருந்துள்ளார். அதோடு, முதலில் கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை உடைத்து அழித்ததிலும் இவருக்கு பங்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நீலம் தேவியோடு மகேஷ் குமாவத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகேஷ் குமாவத்தின் நெருங்கிய உறவினரான கைலாஷ் என்பவரையும் டெல்லி போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE