புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் என்பது பாதுகாப்பு குறைபாடுதான் என்றாலும், அதன் பின்னால் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் காரணங்களாக இருக்கின்றன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் குறித்து அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “நிச்சயமாக பாதுகாப்பு மீறல் உள்ளது. ஆனால் அது ஏன் நடந்தது? நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமுமே. நரேந்திர மோடியின் தவறான கொள்கை காரணமாக நாடு பிரச்சினைகளால் கொழுந்துவிட்டு எரிகிறது. வேலை இல்லாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அரசு இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவத்தை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறி இருக்கிறார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ''நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி போலீஸ்தான் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் என்றும் நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதால் அரசு தரப்புக்கு நாங்கள் எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம்.
புதிய நாடாளுமன்றம் உலகின் பாதுகாப்பு மிக்க இடமாக இருக்கும் என்று ஆளும் தரப்பினர் எங்களிடம் கூறினர். மறுநாளே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடுதான். இதனால், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை இடைநீக்கம் செய்து அரசு தண்டித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இழைத்த தவறுதான் என்ன?'' எனக் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
» பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் ‘காசி தமிழ் சங்கமம் 2.0’ - முக்கிய அம்சங்கள்
» “இலவசங்களை தருவதில் ‘போட்டாபோட்டி’ ஆபத்தானது. ஏனெனில்...” - ரகுராம் ராஜனின் எச்சரிக்கை பார்வை
முன்னதாக. நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் திடீரென்று, மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகைக் குப்பிகளை வீசி கோஷமிட்டனர். நாடாளுமன்ற தீவிரவாதத் தாக்குதலின் 22-வது நினைவு தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டதற்காக கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். நேற்று 2-வது நாளாக, அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
மூளையாக செயல்பட்ட முக்கிய நபரிடம் விசாரணை: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூருவை சேர்ந்த மனோ ரஞ்சன், ஹரியாணாவை சேர்ந்த நீலம், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராமில் வசித்துவந்த விஷால் சர்மா, பிஹாரை சேர்ந்த லலித் ஜா ஆகிய6 பேரும் ‘பகத் சிங் ஃபேன் கிளப்' என்ற சமூகவலைதள பக்கம் மூலம் நண்பர்களாகி உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கோஷமிட திட்டமிட்ட அவர்கள், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வந்தனர். சாகர் சர்மா, மனோ ரஞ்சன் ஆகிய இருவருக்கு மட்டும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மூலம் நுழைவுச் சீட்டு கிடைத்ததால், அவர்கள் மட்டும் மக்களவையில் நுழைந்து வண்ண புகைக் குப்பிகளை வீசினர். அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்டனர். இவர்கள் நால்வர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் சர்மா வீட்டில் இவர்கள் தங்கி இருந்த நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு டெல்லி காவல் துறையிடம் அவர் சரண் அடைந்தார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago