“பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கர்நாடக காங்கிரஸ் அனுமதிக்கிறது” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கார்நாடகாவின் பெலாகவியில் பட்டியலின பெண் ஒருவர் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மேலும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் வாக்கு வங்கி மட்டும் தான் என்று சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நியாயம் இல்லை. சமீபத்தில் பெலாகவியில் நடந்த சம்பவம், காங்கிரஸ் ஆண்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பட்டியல் இனமக்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுடன் சேர்ந்தவையே. காங்கிரஸ் கட்சிக்கு பட்டியில் இன மக்கள் வெறும் வாக்கு வங்கிகள் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் தனது பதிவில் பெலாகவி சம்பவம் குறித்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் அவதானிப்பு குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவில், " கர்நாடகாவின் பெலாகவி மாவட்டத்தில் 2023, டிச.10-11 இடைபட்ட இரவில் 42 வயது பெண் ஒருவரின் மகன் வேறு பெண் ஒருவரை காதலித்து அவளுடன் ஊரைவிட்டுச் சென்றதால், அந்தத் தாயை நிர்வாணப்படுத்தி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், கர்நாடகா மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளில் திருப்தி அடையாத உயர் நீதிமன்றம், இச்சம்பவத்தை தடுக்க தவறிய மாநில அரசினை கண்டித்தும், அப்பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழக்கப்பட்டதா என்றும் ஏன் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்று கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நட்டா கண்டனம்: இதனிடையே, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, இது வெட்கக்கேடான சம்பவம் என்றும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீரான இடைவெளியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் விமர்சித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்: இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்தச் சம்பவம் ஒரே மாதிரியான ஆணாதிக்க அணுகுமுறையையும், பாதிக்கப்பட்டவரின் வாழ்வதற்கான உரிமையினையும், கண்ணியத்தையும் மீறுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. டிச.12 ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவையில் பேசிய மாநில உள்துறை அமைச்சர், ஜி.பரமேஸ்வரா, பெலாகவி கிராமத்தில் பெண்ணை அடித்து நிர்வாணப்படுத்தி, மின்கம்பத்தில் கட்டிவைத்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நட்டாவுக்கு சித்தராமையா பதிலடி: பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் நடந்துள்ளன. அரசியல் ரீதியாக எங்களை தாக்குவதற்காக அவற்றையெல்லாம் பாஜக தலைவர் நட்டா மறந்துள்ளார். துரதிஷ்டவசமாக சமீபத்தில் பெலாகவியில் ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்த சம்பவத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்.

பெலாகவி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதை அரசியலுக்காக நட்டா பயன்படுத்துவது அவமானகரமானது. அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இனி இது போன்ற மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் எங்களுடைய அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE