“சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலம் மிகவும் நிறைவானது” - உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீதிமன்றங்கள் நீதியின் கோயில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நீதிபதிகள் தைரியமாக இருக்க வேண்டும். நீதியை நிர்வகிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், வருகிற திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் பேசிய அவர், “நீதிபதிகள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்க வேண்டும். நீதியை நிர்வகிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்துக்கு நிதி சேகரிப்பவர்கள் இல்லை. எங்களுக்கு சட்டத்தின் கொள்கை என்ன என்பதுதான் முக்கியம். மேலும் இந்த நீதிமன்றம் எந்தவொரு தயவு தாட்சண்யமும், பயமும் இல்லாமல் நீதி வழங்கியுள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக பார் கவுன்சிலில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்றங்கள் நீதியின் கோயில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

மேலும் அவை எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டுவதற்கு, வழக்குதாரர்களுக்காக திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சியாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும். நீதி கிடைப்பது எல்லா நேரங்களிலும் தங்கு தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமையாகும்.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்ததுள்ளது. தமிழக மக்கள் பணிவும், ஏற்பும் நிறைந்த மனப்பாங்கு கொண்டவர்கள். நான் தயக்கத்துடன்தான் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். தற்போது நான் முழு திருப்தியுடன் செல்கிறேன். என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன். சில நேரங்களில் அது சிறந்ததாக அமைந்திருக்கலாம், சில சமயங்களில் அது சிறப்பாக அமைந்திருக்காமலும் இருந்திருக்கலாம், ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்ய முயற்சித்தேன்” என்று உருக்கமாக பேசினார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் நெகிழ்ச்சி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) தனஞ்சய ஒய்.சந்திரசூட் இது குறித்து, “இந்த மேடையை நாங்கள் ஒன்றாகப் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகவும் கவுரவமான விஷயமாக இருக்கிறது. நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம். பல நேரங்களில் கவுலின் நட்பு எனக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். அவர் இனி தொடங்கவிருக்கும் தனது புதிய பயணத்தில் நமது சமூகத்துக்கு தேவையான நிறைய பங்களிப்பை வழங்குவார்” என்றார்.

நீதிபதி கவுலின் பயணம்: தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டெல்லியில் 1958-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பிறந்தவர். 1976-ல் பொருளாதார பட்டம் பெற்றார். 1982-ல் சட்டப் படிப்பை முடித்து, டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சிவில், ரிட், கம்பெனி சட்ட வழக்குகளில் அதிக அனுபவம் பெற்ற இவர், 2001-ம் ஆண்டு மே 3-ல் டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2003-ல் நிரந்தரம் செய்யப்பட்டார். 2013 ஜனவரி 6-ம் தேதி முதல் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார். பின்னர் அவர் ஜூலை 2014 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகச் சேர்ந்தார். பிப்ரவரி 2017 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்