பாபர் மசூதிக்கு மாற்றாக கட்டப்படும் அயோத்தி புதிய மசூதிக்கு புனித மெக்காவின் இமாம் அடிக்கல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.யில் அயோத்தி ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கில் 2019, நவம்பர் 19-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி கட்டப்படும் ராமர் கோயில் அடுத்த வருடம் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது. இதுபோல் பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி வளாகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தனிப்பூர் கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது.

இங்கு கட்டப்படும் மசூதிக்கு முகம்மது பின் அப்துல்லா மசூதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்களின் புனிதத்தலமான மெக்காவின் இமாம் அடிக்கல் நாட்டுகிறார். மெக்காவிலுள்ள காபாவின் மசூதியில் தொழுகைக்குதலைமை ஏற்கும் இவர், மஸ்ஜித்-எ-ஹரம் என்று அழைக்கப்படுகிறார்.

இதுகுறித்து அயோத்தி மசூதியின் வளர்ச்சிக்குழு தலைவரான ஹாஜி அராபாத் ஷேக் கூறும்போது, “அயோத்தி மசூதி, இந்தியாவின் மிகப்பெரிய மசூதியாக அமைய உள்ளது. இதில் எங்குமே இல்லாத பெரிய அளவில் 21 அடி உயரம் 36 அடி நீளத்தில் புனிதக் குர்ஆனின் வாசகமும் செதுக்கப்பட உள்ளது. கலீமா, தொழுகை, நோன்பு, புனித ஹஜ், ஜகாத் எனும் பெயர்களில் ஐந்து மினார்கள் இம்மசூதியில் அமைக்கப்பட உள்ளன” என்றார்.

இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன் (ஐஐசிஎப்) என்றபெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை இந்த மசூதியை கட்டுகிறது. இந்த அறக்கட்டளைக்கு ஜுல்பிகார் அகமது பரூக்கி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி 26, 2021-ல் மசூதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அங்குதேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மிக எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐஐசிஎப் கூட்டத்தில் அயோத்தி மசூதிக்கான வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக, ஐஐசிஎப்-ன் 9உறுப்பினர்களில் ஒருவரும் மும்பையை சேர்ந்த பாஜக தலைவருமான ஹாஜி அராபாத் ஷேக் தேர்வு செய்யப்பட்டார். இவரது தலைமையிலான குழு சார்பில் மீண்டும் பெரிய விழா நடத்த முடிவாகி உள்ளது.மேலும் மசூதிக்கான வடிவம்,பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘மவுல்வி முகம்மது ஷா’ எனும் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மசூதியின் பெயர் மாற்றப்படுகிறது.

தமிழகதில் பிறந்து வளர்ந்த இந்த முகம்மது ஷா, 1857 சிப்பாய் கலகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE