நாடாளுமன்ற அத்துமீறலுக்கு திட்டமிட்ட 6 பேர் யார்?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், அத்துமீறிய 6 பேர் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

சாகர் சர்மா: உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவின் ராம்நகரை சேர்ந்தவர் சாகர் சர்மா. தச்சர் பணி செய்பவரின் மகனான இவர் குடும்பத்தில் மனைவி, மகள் என நான்கு பேர் உள்ளனர். சாகர், லக்னோவில் ரிக் ஷா ஓட்டி பிழைப்பவர். டெல்லியில் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்புவதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார்.

மனோரஞ்சன்: பெங்களூரூவின் விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற மனோரஞ்சன், மைசூரை சேர்ந்தவர். மிகவும் அமைதியான குணம் கொண்ட தனது மகன் சமூகத்துக்கு உதவ எந்த நேரமும் தயாராக இருப்பவர் என அவரது பெற்றோர் கூறுகின்றனர். இவர் சிறுவயது முதல் பகத்சிங் உள்ளிட்ட பல புரட்சியாளர்கள், முற்போக்கு அறிஞர்கள் பற்றிய நூல்களை ஆர்வமாகப் படிப்பவர்.

நீலம் கவுர்: அனைவரில் மெத்தப் படித்தவர் நீலம், இவர் எம்ஏ, எம்எட், எம்பில் பயின்றதுடன் மத்திய அரசின் யூஜிசி நெட் தேர்வும் எழுதி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்ட கஸோ குர்த் கிராமத்தை சேர்ந்தவர் நீலம். மல்யுத்த வீராங்கனையான இவர், வேலை இல்லா திண்டாட்டப் போராட்டங்களில் இளைஞர்களுடன் ஆர்வமாகக் கலந்து கொள்பவர். குடிமைப்பணிக்கான தேர்வுகளை எழுதி வந்தார். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் அவர் மிகவும் வெறுப்பில் இருந்தார்.

அமோல் ஷிண்டே: மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் நவகுந்தாரி கிராமத்தை சேர்ந்தவர். பிஏ பட்டதாரியான அமோலின் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. இந்திய ராணுவம் அல்லது மகாராஷ்டிர காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பியவர். கடந்த டிசம்பர் 9 -ம் தேதி ராணுவத்தின் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.

விஷால் சர்மா: விக்கி என்று அழைக்கப்படும் இவர், டெல்லியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தற்போது ஆட்டோஓட்டி வருகிறார். ஹரியாணாவின் குருகிராமில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவரது அறையில்தான் 6 பேரும் பலமுறை சந்தித்துநாடாளுமன்ற அத்துமீறலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர். விஷாலுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளது.

லலித் ஜா

லலித் ஜா: இவர்தான் நாடாளுமன்ற அத்துமீறலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். மேற்குவங்க மாநிலத்தின் புருலியாவிலுள்ள ஒருஎன்.ஜி.ஓவில் சில ஆண்டுகள் லலித் பணியாற்றி உள்ளார்.லலித் ஜா மறைந்திருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எந்நேரமும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE