கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் | மதுரா மசூதியில் களஆய்வு நடத்தலாம்: அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தர பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்பேரில் அங்கு தொல்லியல் துறை சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டிருப்பதாக இந்துக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரா மற்றும் வாரணாசியில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மதுராவின் சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்துக்கள் சார்பில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி மயாங் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுராவின் ஷாயி ஈத்கா மசூதிவில் களஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்திய தொல்லியல் ஆய்வகம் மசூதியில் களஆய்வு நடத்தி புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளுடன் தனது அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி மயாங் குமார் உத்தரவிட்டார். களஆய்வுக்காக இந்து, முஸ்லிம் மற்றும் அரசு தரப்பில் மூன்று பிரதிநிதிகளை நியமிக்க கோரும் மனு மீது டிசம்பர் 18-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து இந்துக்கள் தரப்பு வழக்கறிஞரான விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, "வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியை போன்று, மதுரா மசூதியிலும் களஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாகும்" என்றார்.

மதுராவில் கிருஷ்ணர் கோயில்-மசூதி பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி மதுரா கோயில் அறக்கட்டளையான கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாயி ஈத்கா மசூதி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் போடப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் எப்போது களஆய்வு தொடங்கப்படும். எவ்வாறு களஆய்வு நடத்தப்படும் என்பன குறித்து வரும் 18-ம் தேதி விசாரணையின்போது முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்