நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த புதன்கிழமை (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் கைகளில் புகை குப்பியுடன் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அவைக்கு வெளியே நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இரண்டு பெண்கள் கோஷமிட்டு கைதாகினர். அவர்களிடமிருந்தும் வண்ண புகைக் குப்பிகள் கைப்பற்றப்பட்டன. அந்த 4 பேருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் இந்த சதிச் செயலில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 6 பேரின் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவை நடவடிக்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் எஞ்சிய குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், மக்களவை அத்துமீறல் சம்பவத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். தனியார் ஊடக கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது: இது மிகவும் பாரதூரமான ஒரு நிகழ்வு. ஆனால் இதனை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நிச்சயமாக குறைபாடு ஏற்பட்டுள்ளதுதான். ஆனால் நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து சபாநாயகர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். அந்த அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும். பாதுகாப்பில் ஓட்டைகள் இருக்கக் கூடாது. அந்த இடைவெளியை சரிசெய்வது எங்கள் பொறுப்பு. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்” இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE