அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி தொடர் முழக்கம்: மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தவறான நடத்தை மற்றும் அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறிய காரணத்துக்காக மாநிலங்களையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மதியம் மக்களைவையில் நடந்த மிகப் பெரிய பாதுகாப்பு அத்துமீறலின் பதற்றத்துக்கு மத்தியில் இன்று காலை மீண்டும் இரு அவைகளும் கூடின. மாநிலங்களவை கூடியதும் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகைக் குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடிய சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் அவையின் மையப்பகுதிக்கு வந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார். அவருடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், கோபமாக காணப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், திரிணமூல் எம்.பி.யை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார்.

அப்போது, “டெரிக் ஓ பிரையனை உடனடியாக அவையை விட்டு வெளியேற வேண்டும். டெரிக் ஓ பிரையன் தலைமையை மீறுவதகாக கூறுகிறார். டெரிக் ஓ பிரையன் உத்தரவுகளை மதிக்கமாட்டேன் என்று கூறுகிறார். இது மிகவும் மோசமான நடவடிக்கை. வெட்கக்கேடான சம்பவம்” என்று கூறிய அவைத் தலைவைர் ஜக்தீப், ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக டெரிக் ஓ பிரையனை அவையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

அவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்த போதிலும் டெரிக் ஓ பிரையனும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் நேற்றைய மக்களவைச் சம்பவம் குறித்து அமித் ஷா மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் குளிர்காலக் கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்கு முன்பாக, “மக்களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று” எம்.பி.க்களிடம் ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் கண்டனம்: மக்களவையில் உறுப்பினர்கள் அமளிக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர், “மக்களவை பாதுகாப்பு மீறல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தத் தேவையில்லை. அவர்கள் பாதுகாப்பு மீறலுக்கு கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் அவை நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது. மேலும், எம்.பி.க்கள் பாஸ் வழங்குதலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே, மக்களவையில் நடந்த அத்துமீறல் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். புதன்கிழமை மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக முதல்வர்களின் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொள்ளச் சென்றிருந்ததால், அவர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன? > மக்களவையில் இருவர் புகுந்ததால் அதிர்ச்சி: பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் குதித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE