நாடாளுமன்ற அத்துமீறல் | உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்க இண்டியா கூட்டணி வலியுறுத்துகிறது: ஜெய்ராம் ரமேஷ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி வலியுறுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மிக தீவிரமான, அதிர்ச்சி அளிக்கக் கூடிய பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு கொடுத்த பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததாலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை ஒத்திவைக்கப்படும் நிலை உருவானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடாளுமன்ற மக்களவைக்குள் என்ன நடந்தது என்பதை நேற்று நாடே பார்த்தது. இந்த அத்துமீறல் குறித்து பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சரோ எந்த அறிக்கையும் அவைக்கு கொடுக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு குறித்தும், சக்தி குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஆட்சியாளர்கள் நாள்தோறும் பேசுகிறார்கள். ஆனால், உள்ளே ஒன்றும் இல்லை. இந்த அத்துமீறல் குறித்து பிரதமர் மோடிக்கு கவலை இல்லையா? மோடியின் உத்தரவாதம் என்று உரக்கச் சொல்கிறார்கள். இதுதான் மோடியின் உத்தரவாதமா?” என கேள்வி எழுப்பினார்.

இதபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “இந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும். அரசு இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதனிடையே, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE