மக்களவையில் இருவர் புகுந்ததால் அதிர்ச்சி: பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் குதித்தனர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001 டிசம்பர் 13-ம் தேதி 5 தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்தியதில், 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டை சுமார் அரை மணி நேரம் நடந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் 22-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று அஞ்சலிசெலுத்தப்பட்டது. அவர்களது புகைப்படங்களுக்கு குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழக்கம்போல தொடர்ந்தன.

சபாநாயகர் இருக்கையை நோக்கி.. நேற்று மதியம் 1 மணி அளவில் மக்களவையில் பூஜ்ய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவையை ராஜேந்திர அகர்வால் நடத்தினார். அப்போது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஓர் இளைஞர் திடீரென மக்களவை எம்.பி.க்கள் இருக்கை பகுதியில் குதித்தார். என்ன நடக்கிறது என்று அவர்கள் உணர்வதற்குள், எம்.பி.க்களின் மேஜைகள் மீது தாவிக் குதித்து, ‘அராஜகம் ஒழிக’ என்று கோஷமிட்டபடி சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினார். பார்வையாளர் மாடத்தில் இருந்தமற்றொரு நபர் வண்ண புகை குப்பியை வீசினார். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எம்.பி.க்கள் விரட்டி பிடித்தனர்.

அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துசென்று டெல்லி சிறப்பு போலீஸார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவத்தை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளு மன்றத்தில் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா உள்ளிட்டஅதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் (35) என்ற இளைஞர்கள். இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேர் கோஷமிட்டனர். இதில் ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், சிவில் சர்வீஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். ஆனால், அரசியல் கட்சிகளுடன் இவருக்கு தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இன்னொருவர் அமோல் ஷிண்டே(25). இவர்களையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 2 பேருக்கு தொடர்பு: டெல்லி அடுத்த குர்கான் பகுதியை சேர்ந்த லலித் ஜா என்பவர் உட்பட மேலும்இருவருக்கும் இந்த சதி திட்டத்தில்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். லலித் ஜா வீட்டில்தான் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட மற்ற 5 பேரும் தங்கி இருந்தனர் என்றும் தெரியவந்தது.

மக்களவையின் பார்வையாளர் மாடத்துக்கு செல்ல 2 இளைஞர்களும் மைசூருவை சேர்ந்த பாஜக எம்.பி பிரதாப் சிம்கா பரிந்துரையின்பேரில் கடவுச்சீட்டு (‘என்ட்ரி பாஸ்’) பெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி கூறினார். அவர்கள் 5 கட்ட பாதுகாப்பு சோதனையை கடந்த பிறகே உள்ளே நுழைந்துள்ளனர். தனது தொகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் என்பதால், நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான பாஸ் வழங்க பிரதாப் சிம்கா பரிந்துரை செய்துள்ளார்.

பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள்குற்றம்சாட்டினர். எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். ‘‘மக்களவையில் நுழைந்தவர்கள் வெளியேற்றியது சாதாரணமான வண்ண புகை. பரபரப்பை ஏற்படுத்த இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE