திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு மாற்றாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் (உள் துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும் அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்கின்றன. ஐபிசி-க்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பாரதிய நியாய (2-வது) சன்ஹிதா மசோதாவில், கும்பலாக சேர்ந்து கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE