நாடாளுமன்ற தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற தாக்குதலின் 22-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உயிர் தியாகம் செய்தவர்களின் புகைப்படத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், “கடந்த 22ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நமது ஜனநாயக கோயிலைசேதப்படுத்தவும் அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டினர்.எனினும், நமது பாதுகாப்புப் படையினர் அதை முறியடித்து விட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்தனர். தீவிரவாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதால், அவர்களுடைய தியாகம் வீணாக அனுமதிக்க மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ்தளத்தில், “ஆபத்தை எதிர்கொண்டபாதுகாப்புப் படையினரின் தைரியமும் தியாகமும் மக்களின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், “கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை துணிச்சலுடன் எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் இன்று நினைவு கூர்வோம்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE