“சாதாரண புகைதான்; கவலை வேண்டாம்” - மக்களவை அத்துமீறல் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட இருவர் மூலம் வெளியான புகை சாதாரணமானதுதான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் எனவே, அது குறித்து உறுப்பினர்கள் கவலைகொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் பேசும்போது, “பூஜ்ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை என தெரியவந்துள்ளது. எனவே, புகை குறித்து அச்சப்படத் தேவையில்லை” என கூறினார்.

இதையடுத்து, வழக்கமான நாடாளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், “விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அனுமதித்தார். அப்போது பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் நாங்கள் மலரஞ்சலி செலுத்தினோம். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இன்று தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 2001-ல் நடந்ததுபோன்ற தாக்குதல் அல்ல இது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும், உயர்மட்ட பாதுகாப்பு தோல்வி அடைந்துவிட்டது என்பதும் தற்போது நிரூபணமாகி இருக்கிறது. அனைத்து எம்பிக்களும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இருவரையும் பிடித்துவிட்டனர். ஆனால், இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, “நாடாளுமன்றத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அந்தக் கேள்வி புறக்கணிக்கப்பட்டது. இது மிகப் பெரிய பாதுகாப்பு தோல்வி” என குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எல்பி எம்பி ஹனுமான் பெனிவால், “இது மிகப் பெரிய பாதுகாப்பு தோல்வி. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE