காஷ்மீர் பிரச்சினையும் நேருவும்: ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் 5 கேள்விகள்

By செய்திப்பிரிவு

பாட்னா: காஷ்மீர் பிரச்சினைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், ''நாடாளுமன்றத்தில் நேருவை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வரலாறு தெரியாதவர் என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். ராகுல் காந்தி எந்த அளவு வரலாற்று அறிவு உள்ளவர் என்பது விவாதத்துக்கு உரிய கேள்வி. ராகுல் காந்தியின் புரிதலுக்காக நான் நான்கைந்து கேள்விகளை கேட்கிறேன். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நோக்கில் இந்திய ராணுவம் தீவிர சண்டையில் ஈடுபட்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது சண்டை நிறுத்தத்தை நேரு அறிவித்தது ஏன்? இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்றது ஏன்? சர்தார் படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்தியது ஏன்? இந்தி - சீனி பாய் பாய் என சீன ஆதரவு நிலைப்பாடு எனும் பெருந்தவற்றை எடுத்தது ஏன்? இந்திய ராணுவம் நவீனமயமாவதை அனுமதிக்காத கிருஷ்ண மேனனுக்கு தொடர்ந்து அதிகாரத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது ஏன்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது 550 சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தையும் இந்தியாவோடு இணைத்தவர் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல். அவற்றில் எந்த பிரச்சினையும் இல்லை. ஜம்மு காஷ்மீர் மட்டும் நேருவால் கையாளப்பட்டது. அதனால் இன்னமும் பிரச்சினை நீடித்துக்கொண்டிருக்கிறது. 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து பெருமளவிலான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. முழுமையான வரலாற்று அறிவு கொண்டவர் அமித் ஷா. ஆனால், ராகுல் காந்தியின் அறிவு எத்தகையது என்பது குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை. மவுண்ட் பேட்டன் மற்றும் ரோமிலா தாப்பர் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் (நேரு) தாமதமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீரில் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 370-வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன் அடைந்து வந்தன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டன. கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் கையில் நாங்கள் லேப்டாப்களை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் அமித் ஷாவின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''பண்டித ஜவஹர்லால் நேரு நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அமித் ஷாவின் பேச்சு, அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க மாட்டேன். வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்.

நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே ஜவஹர்லால் நேரு குறித்து அமித் ஷா விமர்சித்துள்ளார். தற்போதைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். நாட்டின் செல்வங்கள் எங்கே யாருக்கு செல்கின்றன? ஆனால், இந்த விஷயம் குறித்து பேச அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது'' என்று ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்