“ஆழ்ந்த உறக்கத்தில் காங்கிரஸ்!” - ராஜஸ்தான் துணை முதல்வராகும் தியா குமாரி

By செய்திப்பிரிவு

சென்னை: “ராஜஸ்தானில் நிலைமையை மேம்படுத்தவும், இம்மாநிலத்தை மீண்டும் நல்ல பாதைக்கு கொண்டு வரவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக குழுவும், இந்த அரசும் செயல்படும்” என அம்மாநிலத்தின் புதிய துணை முதல்வராக தேர்வாகியுள்ள தியா குமாரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. ராஜஸ்தான் முதல்வராக முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா ஓரம்கட்டப்பட்டுள்ளார். மேலும், துணை முதல்வர்களாக பிரேம் சந்த் பைர்வா மற்றும் தியா குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, ராஜஸ்தானின் புதிய துணை முதல்வராக தேர்வாகியுள்ள தியா குமாரிக்கு ஜெய்ப்பூரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இது குறித்து பேசிய அவர், “ராஜஸ்தான் மாநிலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, நிதி என அனைத்திலும் பாழ்பட்டுக் கிறக்கிறது. காங்கிரஸ் ராஜஸ்தானை ஆட்சி புரிந்த விதத்தால் இம்மாநிலத்துக்கு எந்தவித வளர்ச்சியும் கிடைக்கவில்லை. பொய்யான அறிக்கைகளும், வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும்.

ராஜஸ்தானில் நிலைமையை மேம்படுத்தவும், இம்மாநிலத்தை மீண்டும் நல்ல பாதைக்கு கொண்டு வரவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக குழுவும், இந்த அரசும் செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதுமே பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு பாஜக குழுக்கள் சென்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால், காங்கிரஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது” என்றார்.

தியா குமாரிக்கும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் கருத்து மோதல்கள் இருப்பதாக தகவல்கள் பரவின். இதுகுறித்து பதிலளித்த அவர், "இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். நான் அவருடைய ஆசீர்வாதங்களையும் பெற்றேன்" என்று கூறினார்.

தியா குமாரி பின்னணி: ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த இரண்டாம் மான் சிங்கின் மகன் பவானி சிங்கின் ஒரே மகள் தியா குமாரி. டெல்லி, மும்பை, ஜெய்ப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், லண்டனில் உள்ள செல்சியா கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2013-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தியா குமாரி, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ராஜ்சமந்த் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தியா குமாரி வெற்றி பெற்றார். தற்போது வித்யாதார் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE