குடியரசு தின விழாவில் குவாட் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் குவாட் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு ஜப்பானில் கடந்த மே மாதம் நடைபெற்றது. ஜி7 உச்சி மாநாட்டின் இடையே இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோணி அல்பனிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அடுத்த க்வாட் உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்தியாவின் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக குவாட் தலைவர்களை பங்கேற்கச் செய்யும் நோக்கில், 2024-ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாட்டை ஜனவரியில் நடத்த இந்தியா முன்வந்தது. இந்நிலையில், ஜனவரியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால், அந்த மாதத்தில் தன்னால் இந்தியா வர இயலாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி இருக்கிறார். இதே கருத்தை ஜப்பான் பிரதமர் கிஷிடோவும் கூறி இருக்கிறார். ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின் தேசிய நாள் என்பதால் அன்றைய தினத்தில் தன்னால் இந்தியா வர இயலாது என அல்பனிஸ் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, ஜனவரிக்கு பதிலாக வேறு மாதத்தில் க்வாட் உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக க்வாட் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE