“எனக்காக எதையாவது கேட்பதைவிட சாவது மேல்” - ம.பி. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

By செய்திப்பிரிவு

போபால்: தனக்காக எதையாவது கேட்பதைவிட சாவது மேல் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த முறை பெற்ற வெற்றியைவிட இம்முறை மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மத்தியப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். பெண்கள் பலர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து கதறி அழுதனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியது: ''மத்தியத் பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை மோகன் யாதவ் தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி முடித்து வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முன்னேற்றம் மற்றம் வளர்ச்சியில் மத்தியப் பிரதேசம் புதிய உச்சத்தை எட்டும். அவரை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்.

ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாகவும் பணிவாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக எதையாவது கேட்பதைவிட சாவது மேல். எதன் காரணமாகவே நான் டெல்லி செல்ல மாட்டேன். பாஜக மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அந்த வகையில் 2023 தேர்தல் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. மகிழ்ச்சி மற்றும் திருப்தியால் என் மனம் நிறைந்திருக்கிறது. பிரதமர் மோடியின் புகழ், பாஜக தொண்டர்களின் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக நாங்கள் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம்'' என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், முதல்வராக பொறுப்பேற்க உள்ள மோகன் யாதவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளேன். மத்தியப் பிரதேசத்தின் சிறப்பான எதிர்காலத்துக்காக ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்வோம்'' என குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE