ஆப்தேயை தூக்கிலிட்டது சட்ட விரோதம்: உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்

By எம்.சண்முகம்

மகாத்மா காந்தி சுடப்பட்ட வழக்கில் நாராயண் ஆப்தேயை தூக்கிலிட்டது சட்ட விரோதம். இந்த வழக்கை மீண்டும் விசாரித்து அவர் நிரபராதி என்று அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னீஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அவர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘நாதுராம் கோட்சே தவிர வேறொருவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நான்காவது குண்டு பாய்ந்ததில் தான் காந்தி கொல்லப்பட்டார் என்ற வாதத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. காந்தி கொலையில் வெளிநாட்டு சதி இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டாக்டர் பங்கஜ் பத்னீஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் தத்தாத்ரேயா ஆப்தே ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் கடந்த 21.6.1949 அன்று உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம் உருவாகும் முன், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அங்கமான பிரைவி கவுன்சில் என்ற அமைப்புதான் சட்டப்பூர்வமான இறுதி மேல்முறையீட்டு அமைப்பாக செயல்பட்டு வந்தது. இங்கிலாந்து நாட்டின் மேல்முறையீட்டு மனுக்களை ஹவுஸ் ஆப் லார்டு அமைப்பும், இங்கிலாந்து காலனி நாடுகளில் இருந்து வரும் மேல்முறையீட்டு மனுக்களை பிரைவி கவுன்சிலின் நீதித்துறை ஆணையமும் தான் விசாரித்து வந்தன. ஆப்தே சார்பில் பிரைவி கவுன்சிலை அணுகியபோது, உச்ச நீதிமன்றம் அமையவிருப்பதால் அதற்கு முன்பாக விசாரித்து முடிக்க முடியாது என்பதை காரணம் காட்டி மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து கோட்சே, ஆப்தே இருவரும் 15.11.1949 அன்று அவசர கதியில் தூக்கிலிடப்பட்டனர். அதன்பிறகு 26.1.1950-ல் உச்ச நீதிமன்றம் அமைகிறது. கோட்சே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால், நிரபராதி என்று வாதிட்ட ஆப்தே மேல்முறையீடு செய்து தனது தரப்பை நிரூபிக்கும் முன்பே மத்திய அரசு அவரை தூக்கிலிட்டது தவறு. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், மரண தண்டனை கைதிகளின் மறு ஆய்வு மனுக்களை நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பகிரங்க விசாரணை போகட்டும். மேல்முறையீடு மனு தாக்கல் செய்யக்கூட இடமளிக்கவில்லை. அப்போது காட்டிய அவசரம் சந்தேகத்தை எழுப்புகிறது.

கோட்சே, ஆப்தே இருவரும் வேறு வேறு நபர்கள். கோட்சேயை தூக்கிலிட்டதில் ஒழுங்கீனம் இருந்தாலும், அதில் சட்ட விரோதம் இல்லை. ஆனால், ஆப்தேயை தூக்கிலிட்டது சட்ட விரோதம். அவரது மனநலம் குன்றிய ஆண் குழந்தை மற்றும் ஒரு வயது மகள் இருவரும் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை அரசு கொலை செய்து விட்டதாகவே குற்றம் சாட்ட முடியும். எனவே, ஆப்தே இறந்துவிட்ட நிலையிலும், அரசியல் சாசன சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கை மீண்டும் விசாரித்து அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது பதில் மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்