உ.பி.யின் பிஎச்யு பல்கலை.யில் பாரதியின் 142-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, இங்கு அமைந்திருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலுள்ள(பிஎச்யு) இந்திய மொழிகள் துறையின் தமிழ்ப் பிரிவு சார்பாக நடைபெற்றது.

மகாகவி பாரதியார் தனது இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் உத்தரப்பிரதேசம் வாரணாசியிலும் கழித்திருந்தார். இங்கு அவர் வாழ்ந்த தன் சகோதரியின் வீடு இன்னும் உள்ளது. இதனால், ஒவ்வொரு வருடம் பாரதியாரின் பிறந்தநாள் வாரணாசியில் தமிழர்கள் வாழும் அப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. இதே நிகழ்ச்சி, வாரணாசியிலுள்ள பிஎச்யுவின் இந்திய மொழிகள் துறையின் தமிழ்ப்பிரிவிலும் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் அந்நிகழ்வில் பிஎச்யுவில் உதவிப்பேராசிரியர்கள், தமிழ் பயிலும் மாணவர்கள் கங்கைகரைகளில் ஒன்றான அனுமான் படித்துறைக்கு சென்றனர்.

தமிழ் பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியினான அதன் நுழைவில் உள்ள சுப்பரமணியப் பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு பாரதியார் வாழ்ந்த வீட்டின் ஒரு அறையில் தமிழக அரசால் கடந்த வருடம் அமைக்கப்பட்ட நினைவிடத்திற்கும் சென்றனர்.

அதன் பிறகு பிஎச்யு வளாகத்தில் இந்திய மொழிகள் துறையில் நடைபெற்ற நிகழ்வில் பாரதியாருக்கும் காசிக்கும் உள்ள உறவைக் குறித்து உதவிப்பேராசிரியர் த.ஜெகதீசன் பிறமொழி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மராத்தித் துறைத்தலைவர் பேராசிரியர் ப்ரோமோத் படுவல், தெலுங்குத் துறைத்தலைவர் வெங்கடேஷ்வர்லு ஆகியோர் பங்குபெற்று பாரதியார் இந்தியச் சுதந்திரத்திற்கு தனது எழுத்துகளால் எவ்வாறு பங்களித்தார் என்பதைக் குறித்துப் பேசினர்.

இந்நிகழ்வில், பிறமொழி மாணவர்கள் பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தி மொழிபெயர்ப்பிலும் வாசித்துத் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், பாரதியின் கவிதைகளையும் பிற எழுத்துகளையும் வாசிப்பது தமிழ் கற்பது தொடர்பான ஆர்வத்தினை மேலோங்கச் செய்கிறது என்றும் கூறினர்.

பிறதுறை பேராசிரியர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு, மராத்தி, நேபாளி, இந்தி, பாலி, பெங்காலி முதலிய பிற மொழித்துறை ஆய்வு மாணவர்கள், தமிழ்ப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள், இளங்கலை தமிழ் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபெற்றனர்.

இதே நிகழ்வின்போது, கடந்த ஆண்டு வாரணாசியில் மத்தியக் கல்வித்துறையால் காசி தமிழ் சங்கமம் நடைபெற்றது. அப்போது மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பாரதியார் வீட்டிற்கு வந்து சிறப்பித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE