சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் டிச.13-ல் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வராக வரும் 13-ம் தேதி விஷ்ணு தியோ சாய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை சந்தித்த விஷ்ணு தியோ சாய், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக, அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், விஷ்ணு தியோ சாய் நாளை மறுநாள் (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஷ்ணு தியோ சாய் உடன் அவரது அமைச்சரவையும் அன்றைய தினமே பதவியேற்க இருக்கிறது என்றும், ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE