சட்டப்பிரிவு 370 வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடு இல்லை: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தில் உடன்படாடு இல்லை என்றும், சிறப்புச் சட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை அது "கவுரத்துக்கு தகுதியானது" என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ப. சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ப.சிதம்பரம், "பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் குறித்த தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்கவில்லை. இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை 370-வது பிரிவு மதிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது, அவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றியது விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மக்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அவர்களை காக்க வைக்கக் கூடாது. விரைவாக தேர்தல் நடத்தப்படும்போதுதான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு கேள்விகள் மீது மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க வாய்ப்பு ஏற்படும். ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டதில் இருந்து அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய குடிமக்கள். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி மேம்பட நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

வரவேற்பும் அதிருப்தியும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கூறும்போது, “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறது. அதோடு வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, "காஷ்மீர் பகுதி முழுவதும் இப்போது மெல்லிசை எதிரொலித்து கலாச்சார சுற்றுலா நடைபெறுகிறது. ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைந்துள்ளது. பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் எங்கள் அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்தவும், அப்பகுதி முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்துவும் உறுதி எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

”இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசு என்ன செய்ததோ அது சட்டப்படி செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கூறியுள்ளார்.

“சோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்றம்தான். ஆனால்...” - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இது சோகமானதும், துரதிர்ஷ்டவசமானதும் ஆகும். இந்தத் தீர்ப்பினால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி “ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ, விட்டுக்கொடுக்கவோ போவதில்லை. கண்ணியம், மரியாதைக்கான எங்களின் போராட்டம் சமரசமின்றித் தொடரும். இது எங்கள் பாதையின் முடிவு இல்லை. இந்தியா என்ற சித்தாந்தத்தின் தோல்வியே இது” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா, "ஏமாற்றம்தான். ஆனாலும் மனம்தளரவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். பாஜகவுக்கு இங்கே வர பல தசாப்தங்கள் ஆகின. நாங்களும் நீண்ட தூர பயணத்துக்கு தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பின் இறுதியுரையை வாசித்தார். அப்போது அவர், “காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துவிட்டனர். அங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்