“சோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்றம்தான். ஆனால்...” - காஷ்மீர் தலைவர்கள் கருத்து @ சட்டப்பிரிவு 370 தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த இந்தத் தீர்ப்பு குறித்து முக்கியத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கூறும்போது, “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறது. அதோடு வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, "காஷ்மீர் பகுதி முழுவதும் இப்போது மெல்லிசை எதிரொலித்து கலாச்சார சுற்றுலா நடைபெறுகிறது. ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைந்துள்ளது. பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் எங்கள் அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்தவும், அப்பகுதி முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்துவும் உறுதி எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான (டிபிஏபி) குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இது சோகமானதும், துரதிர்ஷ்டவசமானதும் ஆகும். இந்தத் தீர்ப்பினால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ, விட்டுக்கொடுக்கவோ போவதில்லை. கண்ணியம், மரியாதைக்கான எங்களின் போராட்டம் சமரசமின்றித் தொடரும். இது எங்கள் பாதையின் முடிவு இல்லை. இந்தியா என்ற சித்தாந்தத்தின் தோல்வியே இது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் இணைத்துள்ள வீடியோவில், “நீங்கள் பற்றியிருந்த கரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் மகாராஜா ஹரி சிங்கின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுகையில், "இந்தத் தீர்ப்பினால் மகிழ்ச்சி அடையாத காஷ்மீரின் ஒரு பிரிவு மக்களுக்கு எனது ஆலோசனை என்னவென்றால், தவிர்க்க முடியாதவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் நிஜங்களை ஏற்க வேண்டும். அது, இப்போது நடந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கையை (பிரிவு 370 ரத்து) உறுதி செய்துள்ளது. இப்போது சுவரில் தலையால் மோதி எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. நான் இப்போது ஓர் ஆலோசனை சொல்வேன். அதிருப்தியாளர்கள் தங்களுடைய ஆற்றல் அனைத்தையும் வரும் தேர்தலுக்கு தயாராவதில் திருப்ப வேண்டும். எந்த எதிர்மறையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ளாமல் மக்களைத் தேர்தலுக்கு உத்வேகப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா, "ஏமாற்றம்தான். ஆனாலும் மனம்தளரவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். பாஜகவுக்கு இங்கே வர பல தசாப்தங்கள் ஆகின. நாங்களும் நீண்ட தூர பயணத்துக்கு தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் கூறுகையில், "சட்டப்பிரவு 370 குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் நீதி கிடைக்காமல் போயிருக்கிறது. சட்டப்பிரிவு 370 சட்ட ரீதியாக நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது எப்போதும் மக்களின் அரசியல் விருப்பங்களில் ஒன்றாகவே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

“சட்டப்பிரிவு 370 குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை பாஜக வரவேற்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீரை இந்தியா என்னும் சித்தாந்தத்துடன் இணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலையை செய்துள்ளார். பிரதமரின் இந்தச் செயலுக்காக நானும் கோடான கோடி தொண்டர்களும் பிரதமருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு பின்னணி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்