ஜம்மு காஷ்மீரில் யாரும் கைது செய்யப்படவோ வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை: துணைநிலை ஆளுநர்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு போலீஸார் தங்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இதனை துணைநிலை ஆளுநர் மறுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக, போலீஸார் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி வீட்டுக்கு சீல் வைத்து, அவரை சட்டவிரோத வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேசிய மாநாடு கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இன்று காலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அவரது வீட்டில் வைத்து பூட்டப்பட்டுள்ளார். என்னவொரு அவமானம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இந்தக் கூற்றச்சாட்டுகளை மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அது முழுவதும் ஆதாரமற்றது. ஜம்மு காஷ்மீரில் யாரும் கைது செய்யப்படவோ வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை. இது வதந்திகளைப் பரப்பும் முயற்சி" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீநகரின் குப்கரில் உள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் துணைத்தலைர் ஒமர் அப்துல்லா இருக்கும் வீட்டுக்கு அருகில் பத்திரிகையாளர்களைக் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2020 அக்டோபரில் அதிகாரபூர்வ இல்லத்தை ஒமர் அப்துல்லா காலி செய்த பின்னர் அவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். ஸ்ரீநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக டெல்லியில் இருக்கும் நிலையில், ஓமர் அப்துல்லா மட்டும் காஷ்மீர் வீட்டில் இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு குறித்து விரிவாக வாசிக்க > ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE