மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.சந்திரசேகர ராவை சந்தித்த தெலங்கானா முதல்வர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் (70),கடந்த 7-ம் தேதி இரவு தனதுபண்ணை வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு 8-ம் தேதி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

கடந்த 8-ம் தேதி தெலங்கானா புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரேவந்த் கூறும்போது, “சந்திரசேகர ராவின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தலைமைசெயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் விரைவில் குணமடைந்து சட்டப்பேரவைக்கு வந்து மக்கள்பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும் என ராவிடம் தெரிவித்தேன். மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை வழங்க அவருடைய ஆலோசனை தேவைப்படுகிறது” என்றார்.

தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், முன்னாள் முதல்வரை காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE