கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின்போது மக்களவயில் பேசிய பாஜக எம்.பி., ரமேஷ் பிதுாரி, அம்ரோஹா தொகுதி பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் டேனிஷ் அலிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரமேஷ் பிதுாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த விவகாரம் பெரிதான நிலையில் டேனிஷ் அலி மீது அந்தக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் டேனிஷ் அலி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கட்சித் தலைமை உங்களுக்கு (டேனிஷ் அலி) அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி நீங்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. 2018-ம்ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்றதேர்தலின்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான கட்சிக்கு நீங்கள் பணிபுரிந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் பகுஜன் கட்சியும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும்இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. நீங்கள் இணைந்து பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான் அம்ரோஹா மக்களவைத் தொகுதியில் நீங்கள் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். ஆனால் நீங்கள்அப்போது கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறீர்கள். அதனால் உங்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதற்கான குறிப்பிட்ட காரணத்தை, பகுஜன் சமாஜ் கட்சி மேலிடம் அதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து கழுத்தில் பதாகையைக் கட்டிக் கொண்டு மக்களவையில், டேனிஷ் அலி கோஷம் எழுப்பினார். இதனால்தான் அவரை கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE