சிபிஐ விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மஹுவா மொய்த்ரா சிறை செல்வார்: சட்ட நிபுணர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மஹுவா மொய்த்ரா குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

எம்பி பதவி பறிப்பை எதிர்த்துமஹூவா மொய்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் தற்போதைய மக்களவையின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய இருப்பதால் நீதிமன்ற வழக்கால் எந்த பயனும் இருக்காது.

இப்போதைய நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட தடையில்லை. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐவிசாரணை நடத்தி வருகிறது. இதில் மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும். இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

கடந்த 2005-ம் ஆண்டில் ஆஜ்தக், கோப்ரா போஸ்ட் இணைந்து‘ஸ்டிங் ஆபரேசன்' நடத்தின. அப்போது 11 எம்பிக்கள் பணத்துக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப சம்மதம் தெரிவித்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்திபாஜகவை சேர்ந்த 6 எம்பிக்கள், பகுஜன் சமாஜை சேர்ந்த 3 எம்பிக்கள், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸை சேர்ந்த தலா ஒரு எம்பியை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 11 எம்பிக்களின் பதவி பறிக்கப்பட்டது. தற்போது இதே விவகாரத்தில் மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த 1974-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி அசாமின் சாசார்மாவட்டம் லாபெக்கில் மஹுவா மொய்த்ரா பிறந்தார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பை அவர் நிறைவு செய்தார். பின்னர் அமெரிக்காவில் பொருளாதாரம், கணிதம் பாடங்களில் உயர் கல்வி பயின்றார். இதன்பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டில் உள்ள பிரபல வங்கியில் பணியில் சேர்ந்தார்.

அரசியல் மீதான ஆர்வம் காரணமாக மேற்குவங்கத்துக்கு திரும்பினார். கடந்த 2009-ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த 2010-ல் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அந்த கட்சி சார்பில்கடந்த 2016-ம் ஆண்டில் மேற்குவங்கத்தின் கரீம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்துஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் இருந்துஎம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர் தற்போது எம்பி பதவியை இழந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE