நேரு மீதான அமித் ஷா விமர்சனம்: காங்., எதிர்க்கட்சிகள் கண்டனம் @ காஷ்மீர் விவகாரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கு நாட்டின் முதல் பிரதமர் நேருவே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேருவை விமர்சித்த அமித் ஷா: ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா 2023, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 தவறுகளால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் தவறு, பாகிஸ்தானுடனான போரில் நமது ராணுவம் வெற்றி முகத்தில் இருந்து வந்த நேரத்தில் போர் நிறுத்தத்தை இந்தியா அறிவித்தது ஆகும். 3 நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இரண்டாவதாக, உள்நாட்டுப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாள் பிரதமர் நேரு எடுத்துச் சென்றதாகும். இவை இரண்டுமே மாபெரும் வரலாற்றுத் தவறுகளாகும். வரும் 2026-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம்" என்று தெரிவித்தார்.

அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம்: அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இந்த விவகாரம் குறித்து அவையில் நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும். இது சிறிய விஷயம் இல்லை. வரலாறு தெரிந்த அமித் ஷாவுக்காக மட்டுமல்ல; மற்றவர்களுக்காகவும்கூட இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் திரும்பப் பெறப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே கூறி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மோடி அதிகாரத்தில் இருக்கிறார். அவருக்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாய் 6 ஆண்டு காலம் பிரதமராக இருந்திருக்கிறார். அவர்களை யார் தடுத்தார்கள்? 2024 தேர்தலுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுங்கள். நாட்டின் ஒட்டுமொத்த வாக்கையும் பெறுவீர்கள்'' என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில், 1947 மற்றும் 1948ல் ஜம்மு காஷ்மீரில் நேருவின் பங்கு குறித்து வேண்டுமென்றே ஆத்திரமூட்டக்கூடிய அப்பட்டமான பொய் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். போலி வரலாற்று ஆசிரியர் என்று இதற்கு டாக்டர் ஃபரூக் அப்துல்லா உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்தியா குறித்த உண்மைகளை சிதைக்கும் தந்திரங்கள் இவை. இவ்விஷயத்தில், அமித் ஷாவின் வலையில் நான் விழமாட்டேன். சந்திரசேகர் தாஸ்குப்தாவின் தலைசிறந்த புத்தகமான ‘காஷ்மீரில் போர் மற்றும் ராஜதந்திரம்’ புத்தகத்தை அமித் ஷா படிக்க வேண்டும். காஷ்மீர் குறித்த பல கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய புத்தகம் அது'' என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், மகாராஷ்ட்ரா சுயேட்சை எம்பி நவ்நீத் கவுர், ஐக்கிய ஜனதா தளம் எம்பி சுனில் குமார் பிண்டு ஆகியோர் அமித் ஷா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE