தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததையடுத்து முதல்வராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் அதாவது இப்போது உள்ள பாரத் ராஷ்ட்ர சமிதியில் இணைந்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு குறைகிறது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்குத் தெரியும் முன்பே ரேவந்த் ரெட்டி செல்வாக்குச் சரிவை முன் கூட்டியே கணித்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். இத்தனைக்கும் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சந்திரபாபு நாயுடுவிடம் வெளிப்படையாக தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசி எந்த ஒரு மனஸ்தாபமும் இன்றி தெலுங்கு தேசத்திலிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இவரைப் பற்றிக் கூறுவதென்னவெனில், எப்பேர்ப்பட்ட தலைவர்களையும் திருப்தி செய்யக்கூடிய திறமை மிக்கவர் ரேவந்த். மற்றவர்களெல்லாம் தடுமாறிக் கொண்டிருக்க தன் அரசியல் எதிர்கால முடிவில் தெள்ளத் தெளிவாக முடிவுகளை எடுப்பவர் ரேவந்த். 30 வயதாக இருக்கும் போதே இவர் ஜூப்ளி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியின் தலைவரானார். இங்குதான் தெலங்கானாவின் செல்வாக்கு மிக்க மனிதர்களும் செல்வந்தர்களும் வாழ்கின்றனர்.
2007-ல் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை எம்.எல்.சி.யாக நின்று வெற்றி பெற்றார். இதற்கு ஓராண்டுக்கு முன்னர்தான் ஜில்லா பரிஷத்திலும் வெற்றி பெற்றார் ரேவந்த். இவரது பெரிய பலமாக தெலங்கானா அரசியல் வட்டாரங்களில் கருதப்படுவது என்னவெனில் தேர்தல் யுக்தி வகுப்பதில் வல்லவர் என்பதே. ஜில்லா பரிஷத் தேர்தலிலேயே மற்றவர்களை வேட்பு மனுவை வாபஸ் பெறச் செய்து தனக்கான பாதையை கிளியர் செய்து கொண்டவராம் ரேவந்த்.
தெலங்கானாவின் அனைத்து பெரிய கட்சிகளிலும் இவர் இருந்ததால் எல்லா கட்சிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரேவந்த், கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இப்போது தெலங்கானா மாநில முதல்வராகப் போகிறார். இவரது வளர்ச்சியைக் கண்டு அங்கு சக கட்சியினரே வியப்படைவதுண்டு.
2009-ல் தெலுங்கு தேசம் கட்சியில் கோடங்கல் தொகுதிக்கான டிக்கெட்டைப் பெற்றார். 2014-லும் அதே தொகுதியில் நின்றார். ஆனால் 2018-ல் அதே தொகுதியில் தோல்வி தழுவினார். பிறகு லோக் சபா தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் நின்று மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ரேவந்த். 2017-ல் காங்கிரஸில் இணைந்த இவர், 6 ஆண்டுகளில் இப்போது முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். சித்தராமையாவின் வளர்ச்சியைப் போலவே ரேவந்த்தின் வளர்ச்சியும் ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது. சித்தராமையாவும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவி விரைவிலேயே கர்நாடகா மாநில முதல்வரானது பலரும் அறிந்ததே.
ரேவந்த் ரெட்டியை ‘ரேவந்த் அண்ணா’ என்றே கட்சித்தொண்டர்கள் செல்லமாக அழைக்கின்றனர். மிகவும் ஆக்ரோஷமானவர் என்று பெயர் எடுத்தவர் ரேவந்த். நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இவரைப் போலீசார் கைது செய்ய வந்த போது, அவர்கள் முன்னிலையில் சிங்கம் போல் கர்ஜித்து, “உங்கள் நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள்! நான் தான் அடுத்த முதல்வர். ஊர்க்காவல் படையினரை ஏவி உங்களை வீட்டை விட்டு விரட்டியடிப்பேன்” என்று மிரட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது காரணமின்றி எதிர்க்கட்சியினர் தூண்டுதலின் பேரில் போலீஸார் கைது செய்ய வந்ததாக ரேவந்த் குற்றம்சாட்டினார்.
ரெட்டி குடும்பஸ்தரும் கூட. தேர்தல் டென்ஷன், வெற்றிக்கான பரபரப்பு எதுவும் இவரிடம் இல்லை என்கின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர். டிசம்பர் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் கூட தொலைக்காட்சி விவாதங்கள், கணிப்புகள் என்று எதையும் பார்க்காமல் தன் வீட்டுத் தோட்டத்தில் தன் பேரக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாராம்.
நான் - வெஜ் உணவு வகைகள்தான் ரேவந்த்தின் தனிப்பட்ட பிரியம் என்றும் மதுப்பழக்கம் இவருக்கு இல்லை என்றும் அவருக்கு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. அதுவும் கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. தான் ஒரு மாரடோனா விசிறி என்று சொல்லிக் கொள்வாராம் ரேவந்த். நடிகர் கிருஷ்ணாதான் இவருக்குப் பிடித்த நடிகர். அடுத்த 5 ஆண்டுகளில் தெலங்கானா மாநிலத்தின் வடிவத்தையே மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார் ரேவந்த்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago