''கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி'' - 3 மாநில தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் எம்பிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர். மோடிஜியால் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அப்போது கோஷம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த வெற்றி தனி நபரின் வெற்றி அல்ல என்றும், கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். மேலும், மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்றும் தான் மோடிதான் என்றும் கூறினார். மேலும், தொடர்ந்து கூட்டு முயற்சியுடன் கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "இந்த வெற்றி மாநிலங்களின் அனைத்து உறுப்பினர்களின் கூட்டு முயற்சியால் சாத்திமானது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையுள்ள தலைவர்களின் பங்களிப்புக்கான வெற்றி இது. அப்போது இருந்தே கூட்டு முயற்சி கட்சியில் பிரதிபலித்துள்ளது. பாஜகவின் ஆட்சி முறையும், அதன் செயல்திறனும் மக்கள் அதிக அளவில் விரும்பும் கட்சியாக அதனை மாற்றியுள்ளது" என பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார்.

பாஜக எம்பிகளின் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "கூட்டத்தில் பிரதமர் மோடி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களுடன், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் பாஜக தனது பலத்தை பன்மடங்கு பெருக்கி உள்ளது என்றார். மேலும் அவர், ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, ஆட்சியில் இருக்கும் போது மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 40 முறை தேர்தலைச் சந்தித்து உள்ளது. அதில் 7 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி 22 முறை வெற்றி பெற்றுள்ளது என்றார். அதேபோல் இங்கே பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் என நான்கு சாதிகள் மட்டுமே உள்ளனர். நாம் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE