''இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா முயல வேண்டும்'' - பிரியங்கா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த இந்தியா தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பின்னரும் காசா மீதான தனது தாக்குதல்களை இஸ்ரேல் மிகவும் வலுப்படுத்தியிருக்கிறது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள், 60-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் உட்பட 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒட்டு மொத்த தேசமே அழிந்து வருகிறது. இவர்களும் நம்மைப் போலவே கனவுகளும் நம்பிக்கையும் கொண்டவர்கள்தான். அவர்கள் இரக்கமின்றி நம் கண் முன்னே கொல்லப்படுகிறார்கள். எங்கே நம் மனிதாபிமானம்? இந்தியா சர்வதேச அரங்கில் எப்போதும் நியாத்தின் பக்கமே துணை நிற்கிறது. இந்தியா ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீன மக்களுக்கு தன் ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால் இப்போது அனைத்து மக்களும் படுகொலை செய்யப்படும்போது ஒதுங்கி இருப்பதா?. விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற ஐநா உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநாட்டின் இடையே இஸ்ரேல் அதிபர் ஐசாக் எர்ஜோக்கைச் சந்தித்து, பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இந்தியா ஆதரவாக இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE