“எனக்கு காய்ச்சல்... இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை” - நிதிஷ் குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

பாட்னா: ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்த வதந்திகளை மறுத்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், காய்ச்சல் காரணமாக தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், அடுத்தக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டம் தனது வீட்டில் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருந்தார். இந்த நிலையில் பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் நிதிஷ் குமாரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கூட்டணி பணிகளில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று நான் விருப்புகிறேன். ஆனால், நான் கூட்டத்தில் பங்கேற்பதை நிராகரிக்கிறேன் என்று செய்திகள் வருகிறது. நான் எப்படி கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பேன்? எனக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று கூறினேன். இண்டியா கூட்டணியின் அடுத்தக் கூட்டத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன்" என்று தெரிவித்தார்.

பிஹார் முதல்வரைப் போலவே, திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தை தவிர்த்தனர். தமிழக ஆளும் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின், வெள்ளம் காரணமாக தம்மால் வரமுடியாது எனவும் தனது கட்சி சார்பில் தலைவர்களை அனுப்புவதாகவும் தகவல் அளித்திருந்தார். இதுபோன்ற காரணங்களால், காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் கூட்டணியின் பல தலைவர்கள் காங்கிரஸுக்கு அளிக்கும் அழுத்தம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், 5 மாநில தேர்தலுக்கு முன்பாக மும்பையில் இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் திட்டமிடப்பட்டிருந்தது. கூட்டணி ஒருங்கிணைப்பாளரை அமர்த்தவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 5 மாநில தேர்தலுக்குப் பின் இதை செய்வது காங்கிரஸின் திட்டமாக இருந்தது. இந்த 5 மாநிலங்களில் தங்களுக்கு கிடைக்கும் வெற்றியால், தங்கள் கட்சிக்கானப் பங்கை அதிகரிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தற்போது இழந்து நிற்கும் சூழல் உருவாகிவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு அழுத்தம் அளிக்க முயற்சிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா, இதர கட்சிகளின் யோசனையுடன் தொகுதி பங்கீடு செய்ய வலியுறுத்தி உள்ளார். சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ், உறுதியான முக்கியக் கட்சியே இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு முடிவை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை முன்னிறுத்த விரும்புவதாகத் தெரிகிறது. இதன்மூலம், இண்டியா கூட்டணி கட்சிகளின் மீது தங்கள் கட்சியின் கை ஓங்கியிருக்கும் என்பதும் அவரது நம்பிக்கையாக உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளை காங்கிரஸும் எதிர்பார்த்திருந்தது. 3 மாநிலங்களில் தோல்வி பற்றி ஆலோசிப்பதை விட இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது. இருப்பினும், 3 மாநிலங்களில் அடைந்த தோல்வியால் காங்கிரஸுக்கு இண்டியா கூட்டணியில் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இதனால், இண்டியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தை சமாளிப்பது காங்கிரஸுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்