தொடர்ந்து 3-வது ஆண்டாக பாதுகாப்பான நகரம் கொல்கத்தா

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக உள்ளது. பெருநகரங்களில் தலா 1 லட்சம் மக்கள் தொகைக்கு பதிவு செய்யப்படும் குற்றங்களில் கொல்கத்தாவில்தான் குறைந்த எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகியுள்ளன.இங்கு 2022-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 86.5 புலனாய்வு குற்றங்கள் அதாவது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதேசமயம் இந்த எண்ணிக்கை புனேவில் 280.7 ஆகவும், ஹைதராபாத்தில் 299.2 ஆகவும் இருந்தன.

2021-ம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒரு லட்சம் பேருக்கு 103.4 புலனாய்வு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இது, 2022-ல் 86.5-ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020-ல் 129.5-ஆக இருந்தது.

20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட 19 நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொல்கத்தாவில் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கோவை 12.9, சென்னை 17.1 ஆக உள்ள நிலையில், கொல்கத்தாவில் இது 27.1-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொல்கத்தாவில் வன்முறை குற்றப்பதிவுகள் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE