பாஜக தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடியின் புகழ் மட்டுமே காரணமில்லை: பிரசாந்த் கிஷோர்

By செய்திப்பிரிவு

சிங்வாரா: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜக. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடியின் புகழை மட்டுமே பாஜக நம்பவில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

“பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் அதிக வாக்குகளை பெற காரணம் பிரதமர் மோடியின் புகழை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அதற்கான காரணம் அதையும் கடந்தது. இந்துத்வா கொள்கை, தேசியவாதம், பாஜகவின் நிதி - அமைப்பு ரீதியான பலம் மற்றும் பல்வேறு மக்கள் திட்டங்கள் ஆகிய நான்கும் தான்.

எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த இந்த நான்கில் குறைந்தது மூன்றிலாவது சிறந்த மாற்றை கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக மக்களுக்கான சிறந்த திட்டம் கைவசம் இருக்க வேண்டும். இல்லையென்றால் 10-ல் ஏழு முதல் எட்டு முறை வரை தோல்வியை தழுவ வேண்டி இருக்கும்.

காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் சொல்லலாம். அங்கு ஆட்சியில் இருந்த கட்சிக்கு மாற்றாக வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருந்தனர். அதோடு காங்கிரஸ் அங்கு மாற்று கட்சியாக இருந்தது. அதனால் மக்கள் வாக்களித்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE