புயலால் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் பலத்த காற்றுடன் கனமழை: திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை

By என்.மகேஷ்குமார்


அமராவதி: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று புயலாக மாறியதால், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பதி மலைப்பாதையில் வெள்ள நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் இன்று காலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையை கடக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவெடுத்ததால், பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால், தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆந்திராவில், நெல்லூர், திருப்பதி, சித்தூர், கடப்பா, கர்னூல், குண்டூர். ஓங்கோல், பாபட்லா, கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. புயல் காரணமாக நேற்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயலால் தொடர் மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

புயல் குறித்து விசாகப்பட்டினம் வானிலை மையம தெரிவித்த தகவலின்படி, மிக்ஜாம் புயல் 14 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாலை 4 மணி நேர நிலவரப்படி, - சென்னைக்கு 130 கி.மீ. தூரத்திலும், நெல்லூருக்கு 200 கி.மீ. தூரத்திலும், பாபட்லாவிற்கு 330 கி.மீ. தூரத்திலும், மசூலிப்பட்டினத்திற்கு 350 கி.மீ.தூரத்திலும் இது மையம் கொண்டுள்ளது. இது தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மெல்ல ஆந்திராவை நோக்கி பயணித்து வருகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இது இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வலுவடைந்து நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே உள்ள பாபட்லா அருகே மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் வேளையில், 110 முதல் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் புயல் காற்று வீசும் அபாயம் உள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மிக்ஜாம் புயலால் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இது தொடர்ந்து பெய்து வருவதால், பல நீர்நிலைகள் நிரம்பின. திருப்பதி - திருமலையிலும் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் மெதுவாக செல்லும்படி அறிவுறத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சுவர்ணமுகி அணையில் 2004 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமலையில் உள்ள கோகர்பம் அணை நிரம்பியதால், நேற்றிரவு 3 மதகுகளில் தண்ணீர திறக்கப்பட்டது.

இதனால் திருப்பதி நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பாய்ந்தோடு கிறது. கபில தீர்த்தம் உட்பட பல்வேறு இடங்களில் இயற்கையாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி, திரு மலையின் அழகை மெருகூட்டியுள்ளன. திருப்பதி விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கியதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று காணொலி மூலம் புயல் தாக்கம் அதிகம் உள்ள ராயலசீமா மற்றும் 5 கடலோர ஆந்திர மாவட்டங்களின் ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் போர்க்கால அடிப்படையில் ல உதவி மையங்களை உருவாக்கி, பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE