அய்ஸ்வால்: மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி (எம் என் எஃப்) ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கத்துக்கும் (இசட் பி எம்) இடையே கடும் போட்டிநிலவியது. இரு கட்சிகளின் சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். காங்கிரஸும் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. அனைத்து கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
மிசோரம் தேர்தல் முடிவுகள்டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலம் என்பதால் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் டிசம்பர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவித்தது.
இதன்படி மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்தமாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. 40 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு ஓரிடம்மட்டுமே கிடைத்தது.
மிசோரம் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு 37.86 சதவீதவாக்குகளும், மிசோ தேசிய முன்னணிக்கு 35.10 சதவீத வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் 20.82 சதவீத வாக்குகளையும், பாஜக 5.06 சதவீத வாக்குகளையும் பெற்றன.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அந்த கட்சி இந்த முறை 17 தொகுதிகளை இழந்துள்ளது. ஜோரம் மக்கள் இயக்கம் கடந்த2018-ம் ஆண்டு தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சிக்கு கூடுதலாக 19 இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலில் ஓரிடத்தில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை இரு தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த முறை 4 தொகுதிகளை இழந்துள்ளது.
ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா, சர்ச்ஹிப் சட்டப்பேரவைத் தொகுதியில் 8,314 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மிசோ தேசிய முன்னணி வேட்பாளருக்கு 5,332 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா, மிசோரம்தலைநகர் அய்ஸ்வாலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் எதிர்பார்த்தபடியே மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளோம். அடுத்த சில நாட்களில் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். இந்த மாதத்துக்குள் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மிசோரமின் இளம் வயது பெண் எம்எல்ஏ: மிசோரமின் இளம்வயது பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பாரில் வாணிசங்கி (32) பெற்றுள்ளார். கடந்த 1972-ம் ஆண்டில் அசாமில் இருந்து மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் உதயமான பிறகு இதுவரை 4 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு பெண் எம்எல்ஏகூட தேர்வு செய்யப்படவில்லை. இந்த சூழலில் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் அய்ஸ்வால் தெற்கு-3 தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் பாரில் வாணிசங்கி வெற்றி பெற்றுள்ளார். மிசோரமின் மிக இளவயது பெண் எம்எல்ஏ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றிய பாரில் வாணிசங்கி அரசியல் மீதான ஆர்வம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோரம் மக்கள் இயக்கத்தில் இணைந்தார். முதலில் அய்ஸ்வால் மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜோரம்தங்கா தோல்வி: மிசோ தேசிய முன்னணியின் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோரம் தங்கா, மிசோரமின் அய்ஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் லல்தான் சங்மா 10,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதல்வர் ஜோரம்தங்காவுக்கு 8,626 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மிசோரம் ஆளுநர் கம்பம்பட்டி ஹரிபாபுவை நேற்று மாலை சந்தித்த ஜோரம்தங்கா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மிசோரமின் புதிய முதல்வராகிறார் லால்டுஹோமா: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லால்டுஹோமா, மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவர் லால்டுஹோமா மிசோரமின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இவர் 1977 ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர். கோவாவில் பணியாற்றிய இவர், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் முக்கிய பங்காற்றினார். மிக குறுகிய காலத்தில் மிகச் சிறந்த ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றார்.
கடந்த 1982-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு படைப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல் ஆர்வம் காரணமாக கடந்த 1984-ம் ஆண்டில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். அதே ஆண்டில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1988-ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து லால்டுஹோமா விலகினார். பின்னர் மிசோரம் அரசியலுக்கு திரும்பிய அவர் ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு வித்திட்டார். மிசோரமில் கடந்த 2017-ம் ஆண்டில் ஜோரம் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது. மிசோரம் மக்கள் மாநாடு, ஜோரம் தேசிய கட்சி, ஜோரம் விடுதலை பயண இயக்கம், ஜோரம் அதிகார பரவல் முன்னணி, ஜோரம் மறுமலர்ச்சி முன்னணி, மிசோரம் மக்கள் கட்சி ஆகிய பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து ஜோரம் மக்கள் இயக்கத்தை உருவாக்கின.
கடந்த 2018-ம் ஆண்டில் ஜோரம் மக்கள் இயக்கம் முதல்முறையாக மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. அப்போது தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்காததால் இந்த கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளாக போட்டியிட்டனர். மொத்தம் 36 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் லால்டுஹோமா தோல்வியைத் தழுவினார்.
கடந்த 2019-ம் ஆண்டில் ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. அதன்பிறகு தற்போதைய மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
ஜோரம் மக்கள் இயக்க தலைவர் லால்டுஹோமா தேர்தல் பிரச்சாரத்தில் கூறும்போது, "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலோ, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியிலோ நாங்கள் இணைய மாட்டோம். மிசோரமில் தனி அணியாக செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்தபோது, அந்த கூட்டணி ஆட்சியில் பாஜகவும் இடம் பெற்றிருந்தது. மணிப்பூர் கலவரத்தைத் தொடர்ந்து பாஜகவுடனான உறவை மிசோ தேசிய முன்னணி முறித்து கொண்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago