சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல் விமர்சகர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனாவை நாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம் என்பதை எதிர்ப் பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று தெரிவித்தார்.
உதயநிதியின் கருத்து நாடு முழுவதும் பேசு பொருளாகவும் விவாதமாகவும் மாறியது. ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழி தொலைக்காட்சி சேனல்களில் அவரது கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் நடைபெற்றன.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கும் வகையில், உதயநிதியின் பேச்சால் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மழுப்பலாக பதில் அளித்தது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள், சனாதன எதிர்ப்பு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இந்த சூழலில் 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. பாஜக அமோக வெற்றி
பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் விளக்கம்: இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி என்பது காந்தியடிகளின் கட்சி ஆகும். 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்று பாடிக் கொண்டிருந்த கட்சி இப்போது சனாதன தர்மத்துக்கு எதிராக நிற்கிறது. இடதுசாரி சிந்தனை கொண்ட சிலர் காங்கிரஸில் உள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லையென்றால் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போலவே காங்கிரஸும் மாறிவிடும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியிருக்கிறது. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் கட்சி மூழ்கி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகரின் கருத்து: அரசியல் விமர்சகர் தெசின் பொன்னவாலா கூறியதாவது: சனாதன எதிர்ப்பு விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஒபிசி விவகாரம் மத்திய பிரதேசத்தில் எந்த வகையில் கைகொடுக்கும் என்பதை காங்கிரஸ் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
மத்திய பிரதேசத்தின்தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒபிசி சமூகத்தை சேர்ந்தவர். பாஜக மூத்த தலைவர்கள் பாபுலால் கவுர், உமா பாரதி உள்ளிட்ட பலர் ஒபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதிவாரி கணக்கெடுப்பை நாட்டு மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு தெசின் பொன்னவாலா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், அதற்கான விளைவுகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். மகத்தான வெற்றியை பெற்ற பா.ஜ.கவுக்கு வாழ்த்துகள்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமித் ஷா ஆகியோரின் தலைமைத்துவத்துக்கும் அடிமட்ட அளவில் தொண்டர்களின் சிறப்பான பணிக்கும் இது மற்றொரு சாட்சியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், சாதிவாரி கணக்கெடுப்பை முதலில் கையில் எடுத்தார். பிஹாரில் அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. நிதிஷ் குமார் தொடங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இப்போது தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்கிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதை மக்கள் ஏற்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
புதிய வாக்காளர்களின் தீர்ப்பு: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் 18 வயது நிரம்பிய லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் முதல்முறையாக ஜனநாயக கடமை ஆற்றி உள்ளனர். புதிய வாக்காளர்களில் 10 பேரில் 9 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதம், சாதி அரசியலை தாண்டி இந்தியாவின் வளர்ச்சியை மையமாக வைத்து தேர்தலில் வாக்களித்ததாக முதல் தலைமுறை வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர். அவர்களின் ஜனநாயக தீர்ப்பும் பாஜகவின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago