மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி: தெலங்கானாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

போபால்/ ஜெய்ப்பூர்/ ராய்ப்பூர்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 3 மாநிலங்களிலும் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிக இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம், தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ம.பி.யில் ஆட்சியை தக்கவைத்த பாஜக: மத்திய பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 164 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸுக்கு 65 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாரதிய ஆதிவாசி கட்சி ஓரிடத்தை கைப்பற்றி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 49 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 55 இடங்கள் கிடைத்துள்ளன.

மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சிவராஜ் சிங்சவுகான் 1,64,951 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சர்மாவுக்கு 59,977 வாக்குகள் கிடைத்தன.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் 5-ம் தேதி ‘லாட்லி பெஹ்னாயோஜனா’ திட்டத்தை தொடங்கினார். இதன்படி 1.31 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,250 வழங்கப்பட்டு வருகிறது. ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் அலை மற்றும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் காரணமாக பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது’’ என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் கூறும்போது, ‘‘காங்கிரஸின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களது தவறுகளை ஆய்வு செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு 48.66 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 40.46 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநிலத்தில் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது. இதர 199 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 25-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சி அமைக்க 100 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 115 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

காங்கிரஸுக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாரதிய ஆதிவாசி கட்சி 3,பகுஜன் சமாஜ் 2, ராஷ்டிரிய லோக்தந்திரிக், ராஷ்டிரிய லோக்தளம் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.8 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வரும் பாஜக மூத்ததலைவருமான வசுந்தரா ராஜே, ஜால்ராபாடன் தொகுதியில் 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் 96,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ராஜஸ்தானில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 100, பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 31 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 42 இடங்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக ராஜஸ்தானில் பாஜகவுக்கு 41.73 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 39.54 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

சத்தீஸ்கரில் பாஜக வெற்றி: சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸுக்கு 35 தொகுதி மட்டுமே கிடைத்தன.

சத்தீஸ்கரில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 68, பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 33 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 39 இடங்கள் கிடைத்துள்ளன.

பாஜக முதல்வர் வேட்பாளராக கருதப்படும் ரமண் சிங், ராஜ்நந்தகாவ்ன் தொகுதியில் வெற்றி பெற்றார். பூபேஷ் பாகெல்,பதான் தொகுதியில் வெற்றி பெற்றார்.சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 46.30 சதவீதவாக்குகள், காங்கிரஸுக்கு 42.14 சதவீத வாக்குகள் கிடைத்தன.

மகாதேவ் செயலி விவகாரம்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் ‘மகாதேவ் செயலி’ என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள இருவர் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மகாதேவ் செயலியின் சத்தீஸ்கர் முகவராக செயல்பட்ட அசீம் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘மகாதேவ் செயலி நிர்வாகம் தரப்பில் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு ரூ.508 கோடி வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாதேவ் செயலி விவகாரத்தை பிரதமர் மோடிபிரதானமாக எழுப்பினார். இது காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி நடத்தி வந்தது. அந்த மாநிலத்தில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க60 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாரத் ராஷ்டிர சமிதிக்கு 39, பாஜகவுக்கு 8, ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.

தெலங்கானாவில் கடந்த 2018 தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19, பாஜக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாரத் ராஷ்டிர சமிதி 49 தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸுக்கு கூடுதலாக 45 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு கூடுதலாக 7 இடங்கள் கிடைத்துள்ளன.

ஒட்டுமொத்தமாக தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 39.38 சதவீத வாக்குகளும், பாரத் ராஷ்டிர சமிதிக்கு 37.38 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 13.90 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை: வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற 4 மாநிலங்களுடன் சேர்த்து, மிசோரமிலும் டிசம்பர் 3-ம் தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், மிசோரமில் 4-ம் தேதி (இன்று) வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்கள் தேவை. அந்த மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி - ஜோரம் மக்கள் முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்