தெலங்கானாவில் காங்கிரஸின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு சுனில் கனுகோலு வகுத்த தேர்தல் வியூகம் காரணமா?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெலங்கானாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. அம்மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி கே.சந்திரசேகர் ராவின் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததில் தேர்தல் நிபுணரான சுனில் கனுகோலு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 2023 தேர்தலில் காங்கிரஸ், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுகட்டியுள்ளது.

தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி கர்நாடக தேர்தல் முடிவுகளைப் போலவே ஒத்துகாணப்படுகிறது. இதனால், கனுகோலின் தேர்தல் வியூகங்கள் மூலமாகவே தெலங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி கனியை பறித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரின் தேர்தல் உத்திகளை முழுவதுமாக செயல்படுத்த கனுகோலுக்கு காங்கிரஸ் கட்சி முழு சுதந்திரம் வழங்கியதுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சுனில் கனுகோலு? கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சுனில் கனுகோலு. இந்தியாவில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பிரபலமானவர்களில் இவர் ஒருவர். காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெற தேர்தல் பிரச்சார திட்டங்களை உருவாக்கி கொடுத்தவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்காக பணியாற்றும்படி சந்திரசேகர ராவ் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கனுகோலு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபடப்போவதாக தெரிவித்து அக்கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தியின் நேரடி ஆலோசகராகவும் அறியப்படும் கனுகோலு பாரத் ஜோடோ யாத்திரையில் இவரின் பங்கு முக்கியமானதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE