மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு 5 அம்சங்கள் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

1. மோடியை மையப்படுத்திய பிரச்சாரம்: ‘ம.பி. மக்கள் மனதில் மோடி, மோடியின் மனதில் ம.பி.’ என்ற பிரச்சாரத்தை பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் முன்னெடுத்தனர். இது காங்கிரஸ் கட்சியின் பல்வேறு வாக்குறுதிகளையும் பின்னுக்கு தள்ளியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி 14 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தின் மீது மோடிக்கு சிறப்பு கவனம் உள்ளது என வாக்காளர்களை நம்ப வைக்க முடிந்தது.

2. நலத்திட்டங்கள்: பாஜக அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் தேர்தல் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று என கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதாந்திர நிதியுதவி வழங்கும் லாட்லி பேனா திட்டம், விவசாயிகள் நிதியுதவி திட்டம் ஆகியவை பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த 2 திட்டங்களின் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நவம்பர் மாதத்தில் முறையே ரூ.1,250 மற்றும் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் தருணத்தில் இது வாக்காளர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள், ஏழைகள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் பாஜக மீதான நம்பிக்கையை அதிகரித்தது.

3. ‘இரட்டை இன்ஜின்’ வாக்குறுதிகள்: கடந்த 9 ஆண்டுகளாக பேரவைத் தேர்தலின்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் (இரட்டை இன்ஜின் அரசு) மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் எனக் கூறி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில், கட்சியின் மாநில மற்றும் மேலிட தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதுவும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

4. காங்கிரஸ் கட்சியின் குறைவான பிரச்சாரம்: ம.பி.யில் நேரடியாகவும் சமூக ஊடகங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் 1,200 அறிவிப்புகள் இருந்தும் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கத் தவறி விட்டனர். மாறாக பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக முத்த தலைவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

5. காங்கிரஸை மிஞ்சிய பாஜக வியூகம்: பாஜகவினர் கடந்த 2022-ம் ஆண்டு தொடக்கத்திலேயே தேர்தல் வேலையை தொடங்கினர். குறிப்பாக, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளுக்கு முதலில் வேட்பாளர்களை அறிவித்தனர். மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர்களுடனும் அமித் ஷா பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி அறிவுரை வழங்கினார். அமித் ஷா கொடுத்த ஆலோசனையை அவர்களும் முறையாக செயல்படுத்தினர். இதனால் வழக்கமாக ஆளும் கட்சி மீது இருக்கும் எதிர்ப்பு மனநிலையை சமாளித்து பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்