யார் உயரம் என்பது இப்போது புரிகிறதா? - பிரியங்கா காந்திக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா பதில்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளும் பாஜக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் உயரத்தைக் குறிப்பிட்டு மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மத்திய பிரதேசத்தின் ததியா நகரில் அண்மையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

ஒரு காலத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்தார். உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றினோம். அவரது உயரம் குறைவு. ஆனால் ஆணவம் மிக அதிகம். மன்னர் பரம்பரையை சேர்ந்த அவரை, மகராஜா என்றே அழைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் அவரிடம் இருந்து எந்த உதவியையும் பெற முடியாது.

கடந்த 1857-ம் ஆண்டில் அவர் சார்ந்த குவாலியர் மன்னர் பரம்பரை, ஆங்கிலேயர்களோடு கூட்டணி அமைத்து இந்திய மக்களை ஏமாற்றினர். இதேபோல ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவோடு கூட்டணி அமைத்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார். அவர் குவாலியர் மக்களை ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரியங்கா காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று பதில் அளித்தார். பிரியங்காவின் பெயரைக் குறிப்பிடாமல் சிந்தியா கூறும்போது, “மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் குவாலியர் பகுதியில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சிலர் (பிரியங்கா காந்தி) எனது உயரம் குறித்து பேசினர். குவாலியர் பகுதி மக்கள், தாங்கள் எவ்வளவு உயரம் என்பதை வாக்குகள் மூலம் நிரூபித்து உள்ளனர். யார் உயரம் என்பது இப்போது புரிகிறதா என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE