“தென்மாநிலங்களில் பாஜகவை வளர்க்க முடியவில்லை” - மத்திய அமைச்சர் கருத்து @ தேர்தல் முடிவுகள் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "தென்மாநிலங்களில் நினைத்ததைப் போல பாஜகவை கட்டி எழுப்ப முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் நன்றாக வேலை செய்வோம்" என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “பிரதமர் மோடியின் தலைமைக்கும், திட்டங்களுக்கும் மக்கள் முழுவதுமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் வடபகுதி மக்கள் காங்ரகிரஸ் கட்சியை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். தெலங்கானாவில் மட்டும் அவர்கள் (காங்கிரஸ்) திருப்தி அடைந்துள்ளனர். கர்நாடகாவைத் தவிர தென்மாநிலங்களில் பாஜகவின் இருப்பு இல்லை என்பதே இதற்கு காரணம். தென்மாநிலங்களில் நினைத்ததைப் போல கட்சியை எங்களால் வளர்க்க முடியவில்லை. தெலங்கானாவைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் நாங்கள் சிறப்பக செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 4 மாநிலத்துக்கான வாக்குதள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகள் அடுத்தாண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் தேர்தலைச் சந்தித்த 5 மாநில பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி பேரணிகளில் பங்கேற்று பொதுக் கூட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் 230 இடங்களில் 166 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 90 இடங்களில் 53 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 114 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE