“பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பால்தான்...” - 3 மாநில முடிவுகள் குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "3 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது, இவை அனைத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்புதான் காரணம்" என மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக-வின் கை ஓங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சியை கைப்பற்றவிருக்கிறது. பாஜக நீண்ட காலமாக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றுதான் மத்திய பிரதேசம். அங்கு மீண்டும் வெற்றியை உறுதி செய்திருக்கிறது சிவராஜ் சவுகான் அரசு. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலால் தனது தோல்வியை தானே தேடிக்கொண்டது என்று கூறலாம். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் முகமான பூபேஷ் பாகல் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அதேவேளையில் கேசிஆர் என்ற தெலங்கானாவின் அடையாளத்தை வீழ்த்தி காங்கிரஸின் முகமாக இருந்தவராக அறியப்படுகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி.

இந்த நிலையில், மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று, 'ஸ்வச்சதா அபியான்' குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், மும்பையில் உள்ள கமலா நேரு பூங்காவை ஏக்நாத் ஷிண்டே பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, “மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறவிருக்கிறது. இந்த தேர்தல்களில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது, இவை அனைத்தும் நரேந்திர மோடி மற்றும் அவரது அர்ப்பணிப்பால்தான் நடந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், முதல்வர் சிவராஜ் சௌஹான் நான்காவது முறையாக முதல்வராக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜேவே முதல்வர் தேர்வாக இருப்பார் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE